இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டத்தையும், 2 முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்திட வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தர வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பறிகொடுத்த நிலையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த நேரத்தில் கொரோனா தொற்றுக்கு அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உயிரிழந்தையடுத்து, தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் நிர்வாகிகள் வெற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு இந்த கூட்டத்தில் பாராட்டு, வாழ்த்துகள் தெரிவிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாவது, கட்சி வளர்ச்சி பணிகள், ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் கட்சியின் எதிர்கால நலன்கள் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்று சசிகலா தொடர்ந்து பேசி வருவதால் அவரது வியூகத்தை முறியடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை முன்னெடுப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons