உக்ரைன் மீது ரஷியா 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மனிதாபிமான பாதைகளை விரிவாக்க அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் ஒரு புதிய வீடியோவில், ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து எதிர்க்குமாறு தனது மக்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்கிடையில், உக்ரைன் மீதான போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான செவரோடோனெட்ஸ்க்-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷியாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலென்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உக்ரைன் அதிபரின் உரையை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் உட்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.