மீண்டும் தொடங்கிய இயக்கம்: மன்னிப்பு கோரிய வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

புதுடெல்லி,

இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து போய் விட்டன.

ஆறாவது விரலாய் மாறிப்போன ஸ்மார்ட்போன்கள் உதவியுடன் தங்களின் சுக-துக்கங்களை பகிர்வதற்கும், அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் என பல தேவைகளுக்கு இந்த சமூக ஊடகங்கள் மக்களுக்கு கைகொடுத்து வருகின்றன. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதுவும் பேஸ்புக் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற சமூக ஊடகங்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின. இந்த சமூக வலைத்தள முடக்கம் இரவிலும் தொடர்ந்ததால் பயனாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலை முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக வாட்ஸ் அப் தனது டுவிட்டரில், “இன்று வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த முடியாத நிலை உருவானதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் மெதுவாக மற்றும் கவனமாக வாட்ஸ்அப்பை மீண்டும் வேலை செய்யத் தொடங்கி உள்ளோம். பொறுமை காத்த உங்களுக்கு மிக்க நன்றி. எங்களிடம் மேலும் தகவல்கள் பகிரப்படும்போது நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம்” என்று அதில் பதிவிட்டுள்ளது.

மேலும் இது பற்றி தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், “பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும் – நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons