”தமிழகத்தில், 2021 – 2022ம் நிதியாண்டின், மத்திய ஜி.எஸ்.டி., வருவாயாக, 41 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது,” என, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி., மண்டல முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் முதல் சுதந்திரப் போர், 1857 மே 10ல் துவங்கியது. அந்தப் போரை நினைவுகூரும் வகையில், சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகம் சார்பில், 5 கி.மீ., தொலைவுக்கு சைக்கிள் பேரணி நடந்தது. இந்தப் பேரணியை, முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் மற்றும் சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவிசெல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதன்பின், முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் அளித்த பேட்டி: நாட்டின் முதல் சுதந்திரப் போரை நினைவு கூரும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடந்தது. இதில், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழகத்தில், 2021 – 22ம் நிதியாண்டில், மத்திய ஜி.எஸ்.டி., வருவாயாக, 41 ஆயிரத்து 90 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில், மார்ச்சில் மட்டும், முன் எப்போதும் இல்லாத வகையில், 4,200 கோடி ரூபாய் அதிகம் ஈட்டப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், கடந்த ஆண்டில் வரி வருவாய் உச்சத்தை எட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.