மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். நேற்று தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
மதுரை மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், 28 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதில், மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என 3 சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என காலவரையில்லா வேலை நிறத்தப் போராட்டத்தில் 6000-க்கும் மேற்பட்டோர் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. இதனால், குப்பைகள் தேக்கமடைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் போராட்டம் தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.