மத்திய தலைமையக சேவையின் கீழ் வரும் உதவி பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் கோரி, அமைச்சர்கள், எம்.பி.,க் கள் உள்ளிட்டோரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றும் உதவி பிரிவு அலுவலர்கள், மத்திய தலைமையக சேவையின் கீழ் வருகின்றனர். ‘குரூப் – பி’ அலுவலர்களான இவர்களுடைய சேவை பெரும்பாலும் அமைச்சகங்கள் அல்லது துறையின் தலைமையகமான டில்லியில் தேவைப்படுகிறது.ஆனால், தனிப்பட்ட அல்லது மருத்துவ காரணங்கள் கூறி, பணியிடமாற்றம் கேட்டு பலர் விண்ணப்பிக்கின்றனர்.
இதற்கு அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோரின் பரிந்துரையையும் அதனுடன் இணைக்கின்றனர்.இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:பணி விதிகளின்படி இது போன்ற அரசு அதிகாரிகள் தங்களுடைய பணியிடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசியல் அல்லது பிற அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பணியிடமாற்றம் கேட்டு பலர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.