நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ஆளுநர் – முதலமைச்சர் சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 – 2023 ஆம் கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தாமதம் இன்றி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைச் செய்தி: தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்

பல மாதங்களாக நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டமுன்வடிகள் மற்றும் கோப்புகள் மீது எடுக்கப்படும் உடனடி நடவடிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons