அபாயப் பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அபாயப் பட்டிலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அபாயப் பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கான கரோனா பரிசோதனை விகிதம் 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, அபாயப் பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் இதுவரை தோராயமாக இரண்டு பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது என்றால், அது தற்போது 10 பேராக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளிலிருந்து வருவோருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் நாளை முதல் 7 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுகிறது. அபாயப் பட்டியலில் உள்ள நாடுகளை மட்டுமல்லாமல், அபாயப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் இந்த கட்டுப்பாடு நாளை முதல் பொருந்தும்.
தமிழகத்தில் தற்போது 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்துவிட்டனர். இதன் மூலம், தமிழகத்தில் ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7ல் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, நட்சத்திர விடுகளில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். கூட்டமாக நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களும், அதில் பங்கேற்பதும் வேண்டாம்.
தமிழகத்தில் தற்போது 1,400 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.