நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 607 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்தலில் சுமார் 60.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுக்கள் பதிவான வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடாரங்களை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.