டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்துக்கு இன்று சென்ற முதல்வர் ஸ்டாலினை பல எம்பிக்கள் ஆர்வமாக சந்தித்தனர். மேலும் அவர்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
டெல்லியில் திமுக சார்பில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இது டெல்லியில் உள்ள திமுகவின் கட்சி அலுவலகமாக செயல்பட உள்ளது.
இந்த கட்டடம் ஏப்ரல் 2ல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திறப்பு விழாவில் கூட்டணி கட்சியினர் மற்றும் பிற மாநில தோழமை கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி 3 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார். டெல்லி சென்ற ஸ்டாலினை திமுக எம்பிக்கள் வரவேற்றனர். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த ஸ்டாலின் முக்கிய தலைவர்களை சந்தித்து திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
முன்னதாக அவர் நாடாளுமன்றத்துக்கு இன்று சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, ஸ்டாலின் சந்தித்தார். திறப்பு விழாவில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும் தமிழக நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற அவர் வலியுறுத்தினார். 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்றபோது முக ஸ்டாலினும் திமுக எம்பிக்கள் இருந்தனர். அப்போது தோழமை கட்சிகளின் எம்பிக்கள் பலர் அங்கு வந்து ஸ்டாலினை ஆர்வமாக சந்தித்தனர். நலம் விசாரித்த படி புன்னகைத்து பேசினர். அதன்பின் அவர்கள் ஸ்டாலினுடம் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். சிலர் ஸ்டாலினுடன் கைக்குலுக்கி கொண்டனர்.
மேலும் ஸ்டாலின்- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்திப்பும் அங்கு நிகழ்ந்தது. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக அலுவலகம் சென்ற சோனியா காந்தி, ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது திமுக எம்பி கனிமொழி , ஆ ராசா, டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.