• பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்ளும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்ளும் முறையை மாற்றி, தமிழ்நாடு அரசே அந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில், ஆளுநர் தலையீடு செய்யும் போக்கு, அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநர் என்பவர் மத்திய அரசு மற்றும் ஆளும் கட்சியின் முகவராகவே செயல்படுகிறார். அதனால், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களையும், சட்டத் திருத்தங்களையும் நிறுத்தி வைப்பது, முடக்குவது, மாநில அரசைப் புறக்கணித்து உயர்கல்வி நிறுவனங்களில் தலையிடுவது போன்ற அத்துமீறல்களை வெளிப்படையாகவே மேற்கொள்கிறார். இப்போது கூட, அரசின் இசைவில்லாமலேயே துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் தென் மாநில துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும்போது, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வலியுறுத்தி அதற்காகக் கண்டனத்திற்கு ஆளானார்.

எனவே தமிழ்நாடு அரசு, மாநில உரிமையை வற்புறுத்தும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கொண்டு வந்திருக்கும் சட்ட மசோதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது.

இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள். குஜராத் உள்ளிட்டு பல மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைபாடே பாஜக-வின் அணுகுமுறையில் வெளிப்படுகிறது. அதனை வழிமொழியும் விதத்தில் அதிமுகவும் வெளிநடப்பு செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. அரசியல் சுயநலத்திற்காக, மாநில உரிமைகளைக் கைவிடுகின்ற சந்தர்ப்பவாத போக்கு கண்டனத்திற்குரியது.

பல்கலைக்கழங்களின் வேந்தராக ஆளுநர் நீடிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.

மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் நிலைமை தொடருமானால் அது உயர்கல்வித்துறையில் தலையீடுகள் தொடர்வதற்கே வழிவகுக்கும். எனவே, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் ஏற்பாட்டையும் மாற்றியமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons