தமிழக அமைச்சரவை மாற்றம் : டி.ஆர்.பி., ராஜா சேர்ப்பு – நாசர் நீக்கம்
சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, டி.ஆர்.பி., ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த, 2ம்தேதி அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், சரிவர செயல்படாத அமைச்சர்கள் சிலரின் இலாகா பறிக்கப்படும் ; புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இச்சூழலில், இன்று (மே.,9)ம்தேதி, அமைச்சரவை மாற்றம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அளித்த அறிக்கையை ஏற்பதாக, கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
இதன்படி, மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.,ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ; அவர், வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இவர், 2011ம் ஆண்டு முதல் மன்னார்குடி எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார்.
அதேபோல், பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ; மனோ தங்கராஜ், பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் வாயிலாக, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட, முக்கிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.