தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.
இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம்வைத்து படையல் செய்து வழிபட்டனர்.புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதில், மின்சாரம் பாய்ந்து 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேர் திருவிழாவில் விபத்து நிகழ்ந்தது குறித்து தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு பொறுப்பு அதிகாரி பானுப்பிரியா கூறுகையில்,
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது. ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து விபத்து நடந்துள்ளது என அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்