தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதனால் சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக முன்கூட்டியே அதுவும் மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த நேற்று முன்தினம் கல்லணையை வந்தடைந்தது. இதனால் அன்று குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் உதாரமங்களம் அருகே குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அது மட்டும்ன்றி தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஒரு பக்கம் விளை நிலங்களை உழும் பணிகளும் உழவு செய்யப்பட்டுள்ள பல விளைநிலங்களில் தெளிப்பு முறை மூலம் விதை நெல்லை தெளித்து சாகுபடி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வரலாற்றில் முதல் முறையாக மே மாதத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி அமோகமாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.