வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 145 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது தொடா்ந்து வடமேற்கு திசையில் நகா்ந்து தீவிரப் புயலாக வலுப்பெறும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை மாலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நகா்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் நிலவும்.
பின்னா், வடக்கு திசையில் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகா்ந்து செவ்வாய்க்கிழமை காலை நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும்.
இந்நிலையில் மிக்ஜம் புயல் சென்னையிலிருந்து 145 கி.மீ தொலைவில் நகர்ந்து வரும் நிலையில் நகரில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர், திருமங்கலம், அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் என பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.