தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட கலெக்டர்கள் -போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிக பணி இருந்ததால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார்.

இப்போது கொரோனா பாதிப்பு பல்வேறு மாவட்டங்களில் இல்லாத நிலை உருவாகி உள்ளது. அதுமட்டுமல்ல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள்- போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள அரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் கலெக்டர்களை பேசும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் உள்ள நிலவரங்களை எடுத்துக்கூறினார்கள்.

தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்-நிதிநிலை அறிக்கை, வேளாண்மை பட்ஜெட் அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 80 சதவீதத்துக்கு அதிகமான திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கலெக்டர்கள் வாயிலாக கேட்டறிந்தார்.

மாநாட்டில் சட்டம்- ஒழுங்கு, மாவட்ட நிர்வாகம் குறித்தும் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இன்று மாலையில் போலீஸ் சூப்பிரண்டுகள், உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து அவர் கேட்டறிகிறார். இதில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார்.

இன்று தொடங்கிய இந்த மாநாடு வருகிற சனிக்கிழமை (12-ந்தேதி) வரை 3 நாள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாளை கலெக்டர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலையிலும் கலெக்டர்களுடன ஆலோசனை நடத்துகிறார்.

அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

மாநாட்டு இறுதியில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட கலெக்டர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.

இதையும் படியுங்கள்… உத்தர பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை – வாரணாசி பகுதியில் 144 தடை உத்தரவு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons