சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பூஜைகளும், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட ஏராளமான அபிஷேக வழிபாடுகளும் நடத்தப்படுகிறது.
இதில் படிபூஜைக்கு அதிக கட்டணமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜை ரூ.61 ஆயிரத்து 800 கட்டணத்தில் நடத்தப்படுகிறது.இவ்வாறு அதிக கட்டணத்தில் நடத்தப்படும் படி பூஜைக்கு வருகிற 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்து உள்ளது.
இதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு 2029-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது. இந்த இரு பூஜைகளும் நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது மாத பூஜை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த இரு பூஜைகளும் நடத்தப்படும்.படி பூஜையையொட்டி 18 படிகளையும் கழுவி சுத்தம் செய்து, பட்டு விரித்து, பூக்களால் அலங்காரம் செய்து, 18 படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி தந்திரி தலைமையில் படி பூஜை நடத்தப்படும்.
உதயாஸ்தமன பூஜையையொட்டி காலையில் நடை திறப்பு முதல் இரவு நடை அடைப்பு வரை 18 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.அதன்படி ஒவ்வொரு முறையும் நடை திறந்து உதயாஸ்தமன பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு இந்த 2 பூஜைகளும் மாத பூஜை நாட்களில் நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.