சசிகலாவை நோக்கி அ.தி.மு.க. வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்திக் கண்ணோட்டம் தொடர்கிறது.

சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என தகவல்கள் பறந்த நிலையில் அதைத் தற்போது முற்றிலுமாக அவர் மறுத்துள்ளார். அ.தி.மு.க. தனது தலைமையின் கீழ் கட்டாயம் இயங்கும் என கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரைத் திருவிழாவில் சசிகலா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட சசிகலா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது:

“அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். நிச்சயமாக அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன். தொண்டர்கள் முடிவு தான் அ.தி.மு.க.வில்.

அடுத்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன், யாகம் கிடையாது.

வரும் காலத்தில் அதிமுக எமது தலைமையில் இயங்கும் என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? ஓராண்டு திமுக ஆட்சி சாதனை என ஆட்சி செய்யும் முதல்வர் கூறி கொள்ளலாம், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை. கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்சினை, கஷ்டம். கோவில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல.

அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி நடத்திக்கொள்ளலாம், ஆனால் கோவில் நடைமுறைகளை அரசு மாற்றக் கூடாது.

ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனையல்ல, வேதனை என்று நான் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். அதனை நீங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள்.

நிலக்கரி தொடர்பாக முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம் மட்டுமே ஆட்சியை கொடுத்து விடாது. மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும். அனைத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு இலவசப் பேருந்து என அறிவித்துள்ள நிலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் பெண்கள் மத்தியில் குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அனைத்தையும் சரிசெய்ய வேண்டும்” என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons