கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 1,057 மையங் களில் தொடங்கியது.
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடு செய்யவும், குழந்தைகளின் மனநிலையை இலகுவாக்கவும் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இத்திட்டம் நேற்று தொடங்கியது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.கீதா கூறியதாவது:
தன்னார்வலர்கள் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவையில் முதல்கட்டமாக மொத்தம் 1,057 மையங்களில் இத்திட்டம் தொடங்கியுள்ளது. ஒரு மையத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள 20 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு கற்பிக்க ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர்களும் தன்னார் வலர்களாக இணைந்துள்ளனர். சமுதாய கூடம், அங்கன்வாடி, தன்னார்வலரின் வீடு என பள்ளிகள் தவிர்த்த பொதுவான இடத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் இரண்டு வாரங்களுக்கு பாட்டு, கதை கூறுதல், படம் வரைதல் ஆகிய மனமகிழ்ச்சிக்கான செயல்பாடுகள் இடம்பெறும். அதன்பிறகு, அடிப்படை தமிழ், ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், படிக்கும் பயிற்சி, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணித பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. அறிவியலைப் பொருத்தவரை சூழலை புரிந்துகொள்ளவும், அன்றாட வாழ்வில் அறிவியல் எவ்வாறு இணைந்திருக்கிறது என்பவையும் பாடப்பொருளாக வழங்கப்பட்டுள்ளன. படிப்படியாக மாவட்டத்தின் மற்ற இடங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.