நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு, இன்று முதல் படகுகள் சேவை துவங்குகிறது.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கடற்கரை ஓரங்களை கண்காணிக்கவும், கடல் வழியாக வெளிநாட்டினரின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும், படை வீடுகளுடன் இக்கோட்டை, 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
மொத்தம், 3.5 ஏக்கர் நிலத்தில், 25 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோட்டை, கன்னியாகுமரியில் இருந்து, 7 கி.மீ.,யில் உள்ளது. முதலில் செங்கல் கோட்டையாக இருந்தது. பின், கருங்கற்கோட்டையாக மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி பூம்புகார் படகு தளத்தில் இருந்து விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல, 8 கோடி ரூபாய் செலவில் இரண்டு நவீன படகுகள் வாங்கப்பட்டன.
அந்த படகுகளில், பாறைக்கு பயணியரை ஏற்றிச் செல்ல முடியாததால், இரண்டு ஆண்டுகளாக அந்த படகுகள் சும்மா கிடந்தன.
இப்படகுகள் மூலம் வட்டக்கோட்டைக்கு சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்லலாம் என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து, இன்று முதல் படகுகள் வட்டக்கோட்டைக்கு இயக்கப்படுகின்றன. அமைச்சர் வேலு இதை தொடங்கி வைக்கிறார். குளிர்சாதன படகில் ஒரு நபருக்கு, 450 ரூபாய், சாதாரண படகில், 350 ரூபாய் கட்டணம்.