காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.