உள்ளாட்சி தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் அரசியல் கட்சி அடிப்படையிலும், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும் நடக்கிறது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதல் கட்டமாக 4 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 9 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 66 பேரும், 89 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 417 பேரும், 203 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 782 பேரும், 1,402 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 4,443 பேரும் ஆக மொத்தம் 1,703 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 5,708 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக 939 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பொறுத்தவரை முதல்கட்ட தேர்தல் 5 ஆயிரம் பதவியிடங்களுக்கு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளாட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என தி.மு.க.- அ.தி.மு.க.வினர் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டுகின்றனர்.

இதேபோல் பா.ஜ.க., பா.ம.க., காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றித்தர பாடுபடுவோம் என்று கூறி மக்களிடம் கடந்த 10 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து 2-ம் கட்ட தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 7-ந்தேதி ஓய்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons