உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை  தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்பட வில்லை.

இந்நிலையில், கோடைவிழாவையொட்டி, 124 -ஆவது மலர்க் கண்காட்சி இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியினை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.

முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா, அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்,பி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த மலர் கண்காட்சியில் 1 லட்சம் காரனேஷன் மலா்கைளைக் கொண்டு பிரம்மாண்ட தமிழக வேளாண் பல்கலைக்கழக முகப்பு, 124 -ஆவது கண்காட்சி என்ற வாசகம், நவீன உதகை உருவாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி 10,000 காரனேஷன் மலா்களால் சிறப்பு மலா் அலங்காரமும் மற்றும் செல்பி ஸ்பாட், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், குறும்பர் உட்பட ஆறு பழங்குடியினரின் வடிவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த மலர் கண்காட்சியில், ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்சீனியா, ரெனன்குலஸ் மற்றும் பல புதிய ரக ஆா்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மெரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரஞ்ச் மெரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ் , பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வொ்பினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், லயோலா, லிமோனியம், ட்யூப்ரஸ் பிகோனியா, ருட்பெக்கியா, டொரினியா போன்ற 275 வகையான ரகங்களில் சுமாா் 35,000 மலா்த்தொட்டிகள் பொதுமக்களின் பாா்வைக்கு விருந்தாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலா் நாற்றுகளும் மலா்ந்து அழகாக காட்சியளிக்கின்றன. அத்துடன் மலா்க் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் சுமாா் 20,000 பல வண்ண மலா்த்தொட்டிகள் கண்ணுக்கு குளிா்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைப்பெறுகிறது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பங்கேற்பதை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons