2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஆகிய 4 இடங்களில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாடப்பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட உயர்கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2.11.2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

அதன் தொடர்ச்சியாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம் சின்னயகவுண்டன்வலசில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமய வகுப்புகளுடன் தற்காலிக கட்டிடத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சார்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தற்காலிக கட்டிடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மேற்சொன்ன 3 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கிராமப்புற மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் இந்த கல்லூரிகள் பெரிதும் உதவியாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, மா.மதிவேந்தன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons