கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம், நான் பணம் வாங்கிய ஆதாரம் இருந்தால், அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை சொத்து மதிப்பு குறித்து, அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன்,” என கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கூறினார்.

கரூரில் அவர் அளித்த பேட்டி வருமாறு:

அண்ணாமலை, நான் பெண் என்பதால் பிழைத்து போகட்டும் என விட்டிருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார்?

அண்ணாமலையால் என்ன செய்ய முடியும். அமலாக்கத்துறை என்ற வேட்டை நாயை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், பா.ஜ.,வினர் ஏவிக் கொண்டுள்ளனர்.

முடிந்தால் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பட்டும். என் வீட்டில் கஞ்சி போட்ட காட்டன் சேலைகளை தவிர, எடுக்க ஒன்றும் இல்லை.

மணல் மாபியாக்களிடம் பணம் வாங்கி, அண்ணாமலை போல ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை. வீட்டுக்கு, 3.70 லட்சம் ரூபாய் வாடகை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்லவில்லை.

அவரை போல, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை நான். பெண்கள் மீது தனிப்பட்ட முறையில், கழிச்சடை அரசியல் நடத்துகிற அரசியல்வாதி தான் அண்ணாமலை. கர்நாடகா மாநில காவல் துறையில் இருந்த கருப்பு ஆடு அவர். கடந்த, 2018ல் கர்நாடகா மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை. தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ., சார்பில் எடியூரப்பா, மூன்று நாள் முதல்வராக இருந்தார்.

அப்போது சிக்மக்ளூரில் எஸ்.பி.,யாக இருந்த அண்ணாமலை, எடியூரப்பா அரசை காப்பாற்ற ராம் நகருக்கு மாற்றப்பட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த, காங்., – எம்.எல்.ஏ.,க்களை, பணம் வாங்கி கொண்டு வளைத்து போட அனுப்பப்பட்டவர் தான் அண்ணாமலை.

அந்த முயற்சி தோல்வி அடைந்த போது, மீண்டும் சிக்மக்ளூருக்கு சென்று, பெங்களூருக்கு சென்றவர் அண்ணாமலை. பின், காங்., ஆட்சி அமைந்த பிறகு, அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் பதவி கிடைத்தது. மணல் மாபியாக்களிடம், 60 லட்சம் ரூபாய் வாங்கியதாக சென்னை, பா.ஜ., அலுவலகத்தில் வேலை செய்தவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை சென்றது.

ஆனால், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏன் சென்றனர் என்பதற்கு பதில் இல்லை. அரசு பதவியில் எதிலும் இல்லாமல் உள்ள அண்ணாமலைக்கு வழங்கப்படும் உயர்ந்தபட்ச இசட் பிரிவு பாதுகாப்பு காரணமாக, ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை செலவாகிறது.

எம்.பி., என்ற முறையில் நான் விமானத்தில் முதல் வகுப்பில் கூட செல்வது இல்லை. இவர் எப்படி என்னை கேள்வி கேட்கலாம். மத்தியில் காங்.,கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அண்ணா மலையின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.

அப்போது, அவர் இருக்க வேண்டிய இடம் வேறாக இருக்கும். அண்ணாமலை ஒரு வசூல் ராஜாவாக வலம் வருகிறார். கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம், நான் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால், அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை சொத்து மதிப்பு குறித்து, அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons