அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான ‘அசானி’ தீவிர புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடற்கரை அருகே வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாக செல்லும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.