தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ‘சென்னை பஸ்’ என்ற செயலி தொடங்கப்பட்டது. இந்த செயலியை, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் கோபால், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த செயலியானது, அனைத்து சென்னை மாநகர பஸ்களிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும்படி பஸ்களின் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை செல்போனில் தெரியும்படி, தானியங்கி வாகன இருப்பிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ். கருவி

மாநகர் போக்குவரத்து கழகத்தில் மொத்தமாக உள்ள 3,454 பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களுக்கு 602 வழித்தடங்களில் 6,026 பஸ் நிறுத்தங்களில் நின்றும் செல்லும் வகையில் 3,233 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் தினந்தோறும் பயணம் செய்யக்கூடிய ஏறத்தாழ 25 லட்சம் பயணிகள் உள்பட பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் பயணிகளும் இச்செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்தி பஸ்களில் உரிய நேரத்தில் பயணம் செய்து, சென்னை புறநகர் ரெயில் நிலையம், சென்னை மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் சென்னை நகரத்துக்கு புதிதாக வருகை தரும் மக்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பஸ் நிறுத்தம், அந்த நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருக்கும் பஸ்களின் விவரம் ஆகியவற்றை உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏதுவாக இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே தெரிவித்திட, இச்செயலியில் உள்ள ‘எஸ்.ஓ.எஸ்.’ என்ற பொத்தானை பயன்படுத்திக்கொள்ளலாம்.

1 கி.மீ. தூரத்துக்குள்…

செல்போனில் ‘கூகுள் பிளே ஸ்டோருக்கு’ சென்று ‘சென்னை பஸ்’ செயலியை ‘டவுன்லோடு’ செய்யலாம். செல்போனில் தங்களது இருப்பிடத்தை (லொகேஷன்) ‘ஆன்’ செய்ய வேண்டும். பின்னர் டவுன்லோடு செய்த அந்த செயலிக்கு சென்றால் தங்களது இருப்பிடம் மற்றும் சுமார் 1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் பஸ் நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம் தெரியும்.

எந்த பஸ் நிறுத்தத்துக்கு செல்ல வேண்டுமோ அதனை ‘கிளிக்’ செய்ய வேண்டும். இதையடுத்து அந்த பஸ் நிறுத்தத்துக்கு வரக்கூடிய அனைத்து பஸ்களும், வரிசைப்படி, தட எண், பஸ் பதிவு எண் மற்றும் கணிக்கப்பட்ட நேரம் (நிமிடங்களில்) உள்ளிட்ட விவரங்களை அறியலாம். செல்ல வேண்டிய தட எண்ணை தேர்வு செய்யும் போது, தாங்கள் நிற்கக்கூடிய பஸ் நிறுத்தம் மற்றும் பஸ் வரும் இடம் ஆகியவை வரைபடத்துடன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons