தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் திரு.டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் திரு. தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் திரு. கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்கறிஞர் திரு. ஷாஜகான் ஆகியோரிடம் வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ்மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்கறிஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர்.இந்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 1995-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு பதவியேற்றதும், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007-ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011ஆம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டிற்குப்பின், 10 வருட காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.

அரசு வழக்கறிஞர்களின் பங்களிப்பு மற்றும் பணிப்பளுவினை கருத்திற்கொண்டு இவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் எனக் கருதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திரு. அசன் முகம்மது ஜின்னா அவர்கள் அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார்.இதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உயர்நீதிமன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்கறிஞர்களும் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் திரு. அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க