பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால், பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று வீட்டு உயோக சிலிண்டர் ரூ 1,015 -க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ 710-ஆக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்துக் கடந்த அக்டோபர் 6-ம் தேதி 915 ஆக உயர்ந்தது. மார்ச் மாதம் மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 965 -க்கு விற்பனையானது.
இன்றைய தினம் மீண்டும் காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் ஐந்து மாதங்களில் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 315 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, மே மாதம் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு 104 ரூபாய் வரை உயர்த்தினார்.
தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயுவின் விலை தற்போது சிலிண்டருக்கு ரூ.102.50 அதிகரித்து ரூ 2,355 ஆக உள்ளது.