சென்னை-தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுக்க, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய குடியரசு கட்சியின் மாநில செயல் தலைவர் கருமலை தாக்கல் செய்த மனுவில், ‘சேலம் மாவட்டம் தாத்தையாம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ”பள்ளி கட்டடத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கும்படி, கலெக்டருக்கு, தாசில்தார் பரிந்துரைத்துள்ளார்,” என்றார்.
இதையடுத்து, வீட்டுமனை ஒதுக்கக் கோரி, புதிதாக கலெக்டருக்கு மனு அனுப்பும்படி, மனுதாரருக்கு, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. தமிழகம் பல துறைகளின் வளர்ச்சியில் முன்னணியாக திகழ்வதாகவும், முன்மாதிரி திட்டம் வகுத்தால், அதை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் எனவும், முதல் பெஞ்ச் தெரிவித்தது.வீடுகள் இல்லாத ஏழை எளியவர்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படியும், முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.