“இந்தியாவிலேயே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும்” என, பல்லடத்தில், பா.ஜ.க, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில், பா.ஜ.க, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம், மாவட்டத் தலைவர் செந்தில் வேல் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், விவசாய அணி தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பங்கேற்ற மாநில துணை தலைவர் கனகசபாபதி கூறியதாவது:
தமிழக அரசு பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தியதால், தமிழகம் முழுவதும், குறு சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் துறையினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. தேவைப்பட்டால், தலைமையுடன் ஆலோசித்து போராட்டத்தை முன்னெடுப்போம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செழிப்பான பகுதியில், ‘சிப்காட்’ அமைக்க தமிழக அரசு முயன்றதால் விவசாயிகள் அமைதி வழி போராட்டத்தில் குதித்தனர். வாழ்வாதாரத்துக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும். இதேபோல், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்திலும், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக தி.மு.க., செயல்பட்டு வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் சொத்து வரி, மின் கட்டணம் என, அனைத்து கட்டணங்களையும் உயர்த்தி, ஊழலுக்கு வழி வகுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்