திருப்பதி,

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு உலக புகழ்பெற்றது ஆகும். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செய்வோர் அனைவரும் பிரசாதமாக லட்டினை வாங்கி வருவதுடன், அதனை தனக்கு நெருக்கமானவர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேவஸ்தானம் அறிக்கை அளிக்க வேண்டும் என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், லட்டு விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது;

“திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவின் தரம் குறைந்துவிட்டது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து ஜூன், ஜூலை மாதம் 4 டேங்கரில் வந்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டின் தரம் குறைந்ததாக புகார்கள் வந்தது. லட்டுவின் தரம் குறைந்தது குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தோம்.

முதல் முறையாக நெய் மாதிரிகளை தேவஸ்தான ஆய்வகத்தை தவிர்த்து வேறு ஆய்வகத்திற்கு அனுப்பினோம். குரஜாத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யில் கலப்படம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனைப்படி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தரமற்ற நெய் விநியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக்கூடாது என்பதே எங்களது விருப்பம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

The short URL of the present article is: https://reportertoday.in/t5pd

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons