சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக தஞ்சாவூரிலும் விரைவில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
ரூ.200 கோடி செலவில் ஒரு புதிய உள்நாட்டு முனையத்தை உருவாக்க உள்ளதாகவும் முனையத்திற்கு நான்கு வழி அணுகுமுறை சாலையை அமைக்குமாறும் தமிழ்நாடு அரசாங்கத்திடம் இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்பு கேட்டுள்ளது.
இதையடுத்து, இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் தஞ்சாவூர் விமானப்படைத் தளம் அருகே உள்ள பகுதியில் இந்த முனையம் அமைக்கப்படலாம் என்றும் முனையத்திற்காக 26.5 ஏக்கர் நிலம் இந்திய விமானப்படையிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா அளித்துள்ள விளக்கத்தில், “தஞ்சையில் விமானநிலையம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது அரசின் பல ஆண்டு கனவு. தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
“முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்குப் பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கே பல நிறுவனங்கள் குவியத் தொடங்கி உள்ளன.
“மாசற்ற தொழில் பூங்காக்களும் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளும் இங்கு அமையும். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது. இங்குள்ள இளையர்களும் பலரும் பெரும் பலன் அடைவார்கள்,” எனக் கூறியுள்ளார்.