கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தாலும் எதிர்வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தைவான், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. ஒளி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ வண்ணக்கோலம் பூண்டுள்ளது. கண்களை பறிக்கும் வெளிச்சத்துடன் காணும் இடமெல்லாம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிரெம்ளின் டவர், செஞ்சதுக்கம் உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்விளக்கு வளைவுகளும், கிறிஸ்துமஸ் மரங்களும் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளன.
தலைசிறந்த ரஷ்ய கலைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மின்னொளி விழாவில் சுமார் 4,000 விளக்கு ஜாலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 27 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான அலங்காரங்கள், மாஸ்கோ நகரை மாய உலகமாக மாற்றியுள்ளது. இரவை பகலாக்கிய ஒளி வெள்ளத்தில் மிதந்த பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். 14 நாட்களாக ஜொலிக்கும் மாஸ்கோ நகரில் உணவு பிரியர்களுக்கென பிரத்யேகமாக தற்காலிக கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. வெளிச்சக் கீற்றுகளில் ஒளிர்ந்து பளபளப்பாக மின்னிய பனிச்சறுக்கு பாதையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்கேட்டிங் செய்து உற்சாகத்தில் திளைத்தனர்.
மின் விளக்குகளை பிரதானமாக கொண்டு நடத்தப்படும் இவ்விழாவை குளிர் கால சீசன் முடியும் வரை நீடிக்க வேண்டும் என்பது கோரிக்கை. தைவானில் பல இடங்களில் தொடரும் கொண்டாட்டங்களில் சீன நாட்டினர் மட்டுமின்றி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து சென்றவர்களும் பங்கேற்றுள்ளனர். கிறிஸ்துமஸ் மரங்கள், கண்கவர் கட்டிடங்கள் என வண்ண விளக்குகளில் ஜொலித்தவற்றை ரசித்தவர்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். கொண்டாட்டங்களுக்கு உற்சாக வாழ்வுக்கு வழி ஏற்படுத்தும் என்று மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.