மன்னார்குடி:தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது. எனவே பேரிடர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கோடும், மத்திய அரசு உற்பத்தியிலும் இழப்பிலும் பங்கேற்கும் அடிப்படைக் கொள்கையோடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.கடந்த 2018 -ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு மத்திய மாநில அரசுகளின் பிரிமிய தொகை பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.இதிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய அரசு விரைந்து வழிகாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்திட வலியுறுத்தி மத்திய அரசின் காப்பீட்டு நிறுவன தலைவர் ரித்திஷ் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.மாவட்ட கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மூலம் மழை அளவை கணக்கில் கொண்டும், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டும் இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை வறண்டதால் 2023 ஆகஸ்ட் 7-ந் தேதியே அணை மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதமும் உடன் வழங்கிட வேண்டும்.அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.அரசு நிரந்தர வேளாண் பணியாளர்களை நியமனம் செய்து வெளிப்படை தன்மையுடன் அறுவடை ஆய்வு அறிக்கை செய்திட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கையின் இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று இறுதி படுத்திடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.இந்நிலையில் பிரதமரை இன்று  (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும்.மேலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The short URL of the present article is: https://reportertoday.in/iqd0

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons