‘பெயர் வில்லங்கச் சான்று வழங்க பதிவுத் துறையின் மென்பொருளை, ‘2.0’ பதிலாக ‘3.0’ ஆக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சார்-பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று கோரினார். பல தொழில்நுட்ப காரணங்களைக் கூறி சான்று வழங்கப்படவில்லை.
இதையடுத்து, வில்லங்கச் சான்று வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு செய்தார்.
அந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது:
பதிவுத்துறை விதிகளின்படி, தனிநபர் பெயரில் வில்லங்கச் சான்று வழங்க வேண்டும்.
இதை நடைமுறையில் உள்ள மென்பொருள் மூலம் வழங்குவதற்கான வசதி இல்லை என்ற நிலைப்பாட்டை பதிவுத்துறை கூறுகிறது. இதை மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
அரசு தரப்பில், ‘வில்லங்கச் சான்று வழங்குவதற்கான ‘ஸ்டார் 3.0′ மென்பொருள் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ”2.0விற்கு பதிலாக ‘3.0’ மென்பொருளாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை 8 வாரங்களில் முடிக்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.