தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கிறது. 20 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த பிப்.19-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 22-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. மேலும், பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளும் திமுக வசமாகின. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், நேற்று முன்தினம் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கிறது. மறைமுகத் தேர்தலுக்கான மன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது. அப்போது மேயர், தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் பெறப்படும். போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலுக்கான மன்ற கூட்டம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்க உள்ளது. இந்த பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த மறைமுக தேர்தல் மூலம் மொத்தம் 1,296 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மன்ற கூட்டம் நடக்கும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தி யுள்ளார்.
இதனிடையே கூட்டணி கட்சிகளுக்கான பதவிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், 2 துணை மேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர், 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு துணை மேயர், 2 நகராட்சித் தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சித் தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு துணை மேயர், ஒரு நகராட்சித் தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சித் தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மதிமுகவுக்கு ஒரு துணை மேயர், ஒரு நகராட்சித் தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சித் தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு துணை மேயர், 2 நகராட்சித் தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, 20 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.