திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அதில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களுக்கான நீர்வரத்து கால்வாய்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதோடு, சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி மற்றும் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர் என வினாடிக்கு 4047 கன அடியாக நீர் வரத்து உள்ளது. இதனால் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், பாதுகாப்பு கருதி நீரின் வரத்துக்கு ஏற்ப வெளியேற்றப்படுகிறது.
அதன் அடிப்படையில் பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதையடுத்து கொசஸ்தலை ஆற்று கரையோரங்களைச் சேர்ந்த கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியும், 3645 மில்லியன் கனஅடி நீர் வரையில் சேமிக்கலாம். தற்போதைய நிலையில் 21.30 அடி உயரமும், 2934 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்தாக விநாடிக்கு 600 கன அடியாக உள்ளது. இதைக் கருத்திற்கொண்டு சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக விநாடிக்கு 106 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.