சென்னை மாநகராட்சித் தேர்தலில் 153 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று, மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 74-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஆர்.பிரியா(28) மேயர் வேட்பாளராகவும், 169-வது வார்டில் வென்ற மு.மகேஷ்குமார் துணை மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று ரிப்பன் மாளிகையில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இவர்களது வெற்றி 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேயராகப் பதவியேற்க உள்ள ஆர்.பிரியா, மாநகராட்சி முதல் தலித் மேயரும், 3-வது பெண் மேயருமாவார். இவர் எம்.காம். படித்துள்ளார். இவரது கணவர் கே.ராஜா திரு.வி.க.நகர் பகுதி செயலராக உள்ளார்.
துணை மேயராகப் பதவியேற்க உள்ள மு.மகேஷ்குமார், பி.ஏ. படித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஆதரவாளரான இவர் 1998 முதல் திமுகவில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சைதாப்பேட்டை யில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல, 2001, 2006-ல் மாமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 2006 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.