சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவின் அருகில் எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுஉள்ளது.
‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன.
தொடா்ந்து, லேண்டா் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டா் கொண்டு வரப்பட்டுள்ளது.
லேண்டர் தரையிறங்கும் நிலவின் மேற்பரப்பின் தன்மையை அறிந்து அதற்கேற்ப தரையிறக்க உதவும் வகையில் லேண்டரில் எல்எச்டிஏசி அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எல்எச்டிஏசி அதிநவீன கேமராவால் ஆகஸ்ட் 20-ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் துல்லிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
மேலும், நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நாளை மாலை 5.45 மணிக்கு லேண்டர் தரையிறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது