சென்னை:முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் தி.மு.க. வினராலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுகிறார்கள். இதன் காரணமாக, தொழிலை வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா என்ற எண்ணம் தொழிலதிபர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மத்தியப் பிரதேச முதல்-மந்திரி, சென்ற மாதம் கோயம்புத்தூருக்கு வருகை புரிந்து அங்குள்ள தொழிலதிபர்களுடன் கலந்து உரையாடி உள்ளார்.இதனைத் தொடர்ந்து அறிவுப் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியன் காட்டன் கார்பரேஷனுடனும், பயிற்சி பெற்ற பணியாட்கள் மற்றும் ஜவுளித் தொழிலை அமைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருப்பூர் ஏற்றுமதி சங்கத்துடனும், பருத்தி உற்பத்தியை ஊக்குவிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தென்னிந்திய ஆலை சங்கத்துடனும் மத்திய பிரதேச அரசு மேற்கொண்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீரழிந்து கொண்டே இருந்தால், தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு வெளி மாநிலங்களில் சென்று முதலீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டிற்கு முதலீட்டினை கொண்டு வருவதற்குப் பதிலாக, தமிழ் நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு முதலீடு செல்வது என்பது மிகவும் வருத்தமளிக்கும் செயலாகும்.இந்த நிலை நீடித்தால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, அரசின் வருவாய் குறைந்து, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.எனவே சட்டம் – ஒழுங்கை சீரமைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The short URL of the present article is: https://reportertoday.in/5ll0