ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடையும் என்று கூறினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். என்னைப் பொறுத்தவரை வாக்கிற்கு ஒரு ரூபாய் பணம் கூட கொடுக்காமல் வெற்றி பெற்றவன் என்பதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு செயல்படுபவன் நான் என்று கூறினார்.
பெண்களுக்கான ஊக்கத் தொகை எப்போது கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் உறுதியாக கொடுக்கப்படும் என கூறியுள்ளார். அவர் கட்டளையில் பணியாற்றுபவன் நான். என்றைக்கு அளிக்க சொல்கிறாரோ அன்று ஏற்பாடு செய்ய வேண்டியது எனது கடமை என்று சொன்னார்.
ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது என்று கிண்டல் அடித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் சாத்தியமில்லை என்றார். அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம் ஆகும். ஒரே நாடு ஒரே பத்திரப் பதிவு என்கிறார்கள். பத்திரப் பதிவில் மதுரையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது.
கோயில் நிலத்தியிலேயே ஆக்கிரமிப்பு செய்து பதிந்த நிகழ்வுகளும் நடைபெற்றது. அப்படி இருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ளபோது, ஒரே நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக, குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தலை இல்லாத வால்கள், கால்கள் ஆட்சி நடத்தியதால்தான் தமிழகத்தில் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம். வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக் கொண்டு வருகிறோம் அதனை செம்மையாக செய்து முடிப்போம் என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.