திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நேரில் கலந்து கொள்ள அனுமதியில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி கிராமம். இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் உள்ளது. திருஞானம்சம்மந்தரால் தேவாரம் பாடல்பெற்ற தலம். நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு கடந்த 13-ஆம் தேதி சனிக்கிழமை பெயர்ச்சி அடைந்ததையொட்டி வரும் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் ஏகதின லட்சார்ச்சனையில் அஞ்சல் மூலம் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். நேரில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.
கட்டணம்: லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனை பிரசாதமாக அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படும். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
வரைவோலை அல்லது மணியார்டர் மூலம் தொகை அனுப்புபவர்கள் உதவிஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில்,(குருபரிகாரஸ்தலம்) ஆலங்குடி-612801 , வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வரைவோலை எடுப்போர் சிட்டியூனியன் வங்கி ஆலங்குடி கிளையில் மாற்றத்தக்க வகையிலும், பிறவங்கிகளில் வரைவோலை எடுப்போர் கும்பகோணம் கிளையில் மாற்றத்தக்க வகையிலும் எடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை கோயில் தக்கார் மற்றும் உதவிஆணையர் ஹரிஹரன்,உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.