தேர்வு முடிவுகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி. ) நடத்தப்படும், குரூப்-1, 2 மற்றும் 4 பணிகளில் அடங்கிய பதவிகள் நீங்கலாக மற்ற அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இனைய வழியில் விண்ணப்பம் செய்வதில் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போதே அவர்களால் இணையவழி விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள், உரிமை கோரல்களுக்கு ஆதாரமான அனைத்து தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை 200 கே.பி.க்கு மிகாமல் உள்ள ஒரு பி.டி.எப். வடிவில் இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.
பதிவேற்றம் செய்யப்படவேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் குறித்த தகவல்கள் நேரடி நியமனங்களுக்காக தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளில் காணலாம்.
விண்ணப்பதார் இ-சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைஉறுதி செய்துகொள்ளவேண்டும். அதற்கேற்றாற்போல் விண்ணப்பதார்கள் ஆவணங்கள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களை விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறை பதிவின் மூலம் சரிபார்த்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சான்றிதழ் தவறாகபதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் விண்ணப்பித்திருந்த பதவிக்கான ஹால்டிக்கெட்டினை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் 2 நாட்களுக்கு முன்பு வரை, (அதாவது தேர்வு நடைபெற உள்ள தேதிக்கு 12 நாட்கள் முன்னர்) சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, மறு பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது, முற்றிலும் விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையிலேயே அமையும். எழுத்துத் தேர்வுக்கு பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான எந்த அறிவிப்பும் தேர்வாணையத்தால் அனுப்பப்படமாட்டாது. எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.