தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் தற்போது நடக்கும் பொதுக்குழுவுடன் சேர்த்து செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது.
பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கட்சியினரை அதிமுக அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஆண்டுதோறும் இருமுறை செயற்குழு கூட்டமும் ஒரு முறை பொது குழு கூட்டமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னராக நடைபெறும் பொதுக்குழு என்பதால் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் 7 இடங்களில் டெபாசிட் இழந்து உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் வகையில் மூத்த நிர்வாகிகள் 10 பேர் கொண்ட குழுவை கள ஆய்விற்காக நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தக் குழுவும் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு கட்சி தலைமையிடம் அவர்கள் நடத்திய கள ஆய்வின் தகவல்களைக் கொடுத்துள்ளது என்றும் அது குறித்தும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்கப்படுகின்றன.
உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதால் இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அதற்கான தீர்மானம், சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்தான வியூகங்களை அமைப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுக்குழு செயற்குழு வழங்குவது, டங்ஸ்டன் தொழிற்சாலை எதிராக மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானம், எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம், அதை தொடர்ந்து அடுத்த 15 மாதங்கள் சட்டப்பேரவை தேர்தல்பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் போன்ற பல முக்கிய முடிவுகளை செயற்குழு பொதுக்குழுவில் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.