தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ஆம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனினும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கட்சியின் தொண்டர்களாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா இரண்டாம் அலையின் பெரும் தாக்கத்தில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று, அதனைத் திறம்படக் கட்டுப்படுத்தியதுபோல, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் தொண்டர்களின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் திமுகவின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons