சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன்பின்னர் அமைச்சர் கூறும்போது, தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, கொசு ஒழிப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பல்வேறு காய்ச்சல்கள், தமிழகத்தில் பரவுவதை தடுக்க, மாநில எல்லை பகுதிகளில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி அமைப்பு சார்பில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தல், நீர்நிலைகளில் கம்பூசியா மீன்களின் வாயிலாக கொசு முட்டைகளை அழித்தல், வீடுகளில் தேங்கும் நல்ல நீரில் கொசுப்புழுக்கள் வளர்வதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை 83 ஆயிரத்து 409 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொண்டதில் 2,930 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.