மதுரை: தமிழகத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனையை முற்றிலுமாக துடைத்தொழிக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க சிறப்புப் பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
“காவல்துறையினர் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை. இல்லையெனில் கஞ்சா புழக்கம், வழக்குகள் எப்படி அதிகரிக்கும்?,” என்று அரசுத் தரப்பை நோக்கி நீதிபதிகள் கேட்டனர்.
இதையடுத்து, தமிழக அரசு வழக்கறிஞர் சில தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“கடந்த மூன்று ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார் அரசு வழக்கறிஞர்.
இதையடுத்து, தமிழக உள்துறை செயலர், தமிழக டிஜிபி ஆகியோர் விரிவான பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிகரிக்கும் தங்கக் கடத்தல்
சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பணம், அரிய வகை உயிரினங்கள் கடத்தி வரப்படுவதும் அதிகரித்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடப்பு 2023-24ஆம் ஆண்டில் மட்டும் ரூ.248.70 கோடி மதிப்பிலான 440 கிலோ தங்கம், ரூ.192 கோடி மதிப்பில் 42.68 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், ரூ.19.44 கோடி வெளிநாட்டுப் பணம், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 150க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதையடுத்து, அனைத்து வகை கடத்தல் முயற்சிகளையும் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.