- எடப்பாடி கட்டும் மனக்கோட்டையைத் தவிடு பொடியாக்கும் செயலில் சசிகலா ஈடுபடலாம் எனத் தெரிகிறது. அது பற்றிய ஒரு அலசல்!
சசிகலா ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்டு அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்கள் பலரும் சசிகலா ஏன் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் பொறுமை காக்கிறார் என தங்களுக்குள் பேசி வந்தனர்.
இதற்கிடையே சசிகலா ஆதரவாளர்கள் என அமமுகவினரையும் அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். இரண்டு கட்சிகளிலிருந்தும் வந்தவர்களை தக்க வைப்பது முக்கியமாக அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆகிய பணிகளில் சசிகலா ஈடுபட்டு வருகிறார்.
தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை எப்படி அமைப்பது என்பது தொடர்பாக சசிகலா முக்கியமான சிலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். யார் அந்த முக்கியமானவர்கள் என விசாரித்தால் ஒரு காலத்தில் சசிகலாவால் கைகாட்டி பெரிய இடத்தில் அமர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள். சசிகலாவால் பலனடைந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அவரை கைவிட்ட நிலையில் முன்னாள் அதிகாரிகள் சிலர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
முன்னதாக சிலர் அதிமுக இல்லாவிட்டால் என்ன தனி கட்சி தொடங்கலாம் என சசிகலாவுக்கு யோசனை கூறியுள்ளனர். ஆனால் அது ஆபத்தான முடிவு என முன்னாள் அதிகாரிகள் குழு எச்சரித்துள்ளது. தனிக்கட்சி தொடங்கிவிட்டால் அதோடு ஓரங்கட்டிவிடுவார்கள், அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு அதுதான் வேண்டும், எனவே அதற்கு இடம் கொடுக்ககூடாது. அதிமுகவை கைப்பற்றுவதற்கான வழிகளை மட்டுமே யோசிக்க வேண்டும்.
அதிமுகவில் தற்போது 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் 22 உறுப்பினர்களை நம் பக்கம் கொண்டு வந்துவிட்டால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. எனவே 30 எம்.எல்.ஏக்களுக்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கினால் நீங்கள் நினைத்தது நடக்கும் என அந்த மாஜி அதிகாரிகள் குழு கூறியுள்ளது.யார் யாரை இழுக்கலாம் என்பது குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேற்சொன்ன கணக்கில் அவ்வளவு பேரும் சசிகலா பக்கம் வராவிட்டால் கூட ஒரு சிலர் மட்டும் வந்தாலே போதுமானது தற்போதைய தலைமைக்கு எதிரான அதிருப்தி அலையை அதிகரிப்பதற்கு.
சசிகலாவை ஆதரிக்கலாமா வேண்டாமா என இரு மனநிலையில் உள்ளவர்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சசிகலா பக்கம் எளிதாக வந்துவிடுவார்கள். அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் விதமாக இந்த மூவ் இருக்கும் என்கிறார்கள் மாஜி அதிகாரிகள் குழுவினர்.