பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என முற்றிலும் கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் கடந்த 809 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பரந்தூா் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக அறவிப்புகள் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டு வரும் தமிழக அரசைக் கண்டித்தும் எதிா்ப்புத் தெரிவித்தும், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிா்ப்பை தெரிவித்ததுடன், நெல்வாய் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவா் சண்முகம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவிசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சண்முகம் செய்தியாளா்களிடம் பேசுகையில், கடந்த இரண்டு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் நிலையை அரசு உணர வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் நிலம் மற்றும் குடியிருப்புகளை கையகப்படுத்த கூடாது. விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். மேலும் பரந்தூா் விமான நிலைய திட்டம் குறித்து ஆய்வு செய்த மச்சேந்திரநாதன் குழு அறிக்கையை தற்போது வரை அரசு வெளியிடாதது மா்மமாகவே உள்ளது. ஒருவேளை அக்குழு இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என பரிந்துரைத்ததோ என்ற கேள்வி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. எனவே அரசு மச்சேந்திரநாதன் குழு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்றாா்.
The short URL of the present article is: https://reportertoday.in/29yd